

மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (ஜன. 2) கர்நாடகா வருகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வரும் பிரதமர், கணபதி சச்சிதானந்த சுவாமியின் அவதூத தத்த பீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இதையடுத்து மைசூரு மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடக்கும் சுத்தூர் மடத்தின் மறைந்த சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.
அன்று இரவு மைசூருவில் தங்கி, மாநில பாஜக தலைவர்களுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கிறார்.
நாளை (ஜன. 3) மைசூரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து துமகூரு மாவட்டத்தில் உள்ள நிட்டூர் கிராமத்துக்கு வரும் மோடி, அங்கு எச்.ஏ.எல். நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையடுத்து பெங்களூருவை அடுத்துள்ள ஜிகினி-யில் சுவாமி விவேகானந்தா யோகா அனுசாதனா சம்ஸ்தானா நடத்தும் சர்வதேச யோகா மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அவர் டெல்லி புறப்படுகிறார். பிரதமரின் வருகையையொட்டி கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.