Published : 03 Oct 2014 04:13 PM
Last Updated : 03 Oct 2014 04:13 PM

தூர்தர்ஷனில் ஆபத்தான கலாச்சாரம் ஆக்கிரமிப்பு: ஆர்எஸ்எஸ் ஒளிபரப்புக்கு காங். கண்டனம்

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனை ஆபத்தான கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடந்த தசரா பேரணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 89-வது ஆண்டு விழாவையும், அதன் தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரையும் தூர்தர்ஷனில் 1 மணி நேரத்திற்கு ஒளிபரப்பபட்டதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் இத்தகைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீக்‌ஷித் இது குறித்து கூறும்போது, "ஆர்.எஸ்.எஸ். என்பது சர்ச்சைக்குரிய மத, அரசியல் அமைப்பு. அத்தகைய அமைப்பின் ஒரு நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது மிகவும் ஆபத்தானது. தூர்தர்ஷனை ஒரு ஆபத்தான கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல் தலையீட்டால்தான் இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் ரஷீத் ஆல்வி, "ஒரு மதவாத அமைப்பின் கருத்துகளை பொதுவெளியில் எப்படி ஒளிபரப்பலாம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த தருணத்தை இந்துத்துவா கொள்கையை பரப்ப பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பின் தலைவர் பேசுவதை நேரலையாக ஒரு பொது உடமை ஊடகத்தில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா: "ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரை தூர்தர்ஷனில் 1 மணி நேரத்திற்கு ஒளிபரப்பபட்டது குறித்து தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மோகன் பகவத் தனது உரையில், பசுவதைக்கு நிரந்தர தடை கொண்டுவரப்பட வேண்டும், இறைச்சி ஏற்றுமதி நிறுத்தப்பட வேண்டும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கேரளா, தமிழகத்தில் ஜிஹாதிகள் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் வங்கதேசத்தவர் சட்ட விரோதமாகக் குடியேறுவதால் இந்து மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதே வேளையில், மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே ஆகின்றன. ஆனால், அரசு சரியான திசையில் செல்கிறது. மக்களிடம் இருந்து அரசுக்கு ஆதரவான அலைகள் எழத் துவங்கியுள்ளன. இருப்பினும் ஆண்டுகள் பலவாக நீடிக்கும் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்படாது.

அதற்கான மந்திரக் கோல் எந்த அரசியல்வாதியிடமும் இல்லை. நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட அரசுக்கு சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும் என பாராட்டும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பாராட்டு:

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி தேசிய ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில் அதை சற்றும் சட்டை செய்யாதவராக பிரதமர் மோடி, மோகன் பகவத் பேச்சைப் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். "மோகன் பகவத் அவர்கள் மிக முக்கியமாக தேசியப் பிரச்சினைகளை முன்வைத்துள்ளார். சமூக சீர்திருத்தத்திற்காக அவர் முன்வைத்துள்ள கருத்துகள் மிகவும் பொருத்துமானவை" என ட்விட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மோகன் பகவத் முழு பேச்சு விபரம் அடங்கிய இணையதள இணைப்பையும் பதிவு செய்துள்ளார்.

தூர்தர்ஷன் விளக்கம்:

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து ஏதும் அளிக்கப்படவில்லை. மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது போலவே இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது என தூர்தர்ஷன் விளக்கமளித்துள்ளது.

தூர்தர்ஷனின் டைரக்டர் ஜெனரல் அர்ச்சனா தத்தா இந்த விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக அங்கு 7 செய்தி சேகரிப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற்றதால், வேறு எந்த ஒரு நிகழ்ச்சியைப் போல் இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x