Published : 03 Aug 2016 10:01 am

Updated : 14 Jun 2017 17:00 pm

 

Published : 03 Aug 2016 10:01 AM
Last Updated : 14 Jun 2017 05:00 PM

நாடாளுமன்றத் துளிகள்: 2.16 கோடி போலி குடும்ப அட்டைகள்

2-16

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேற்று நேரிலும் எழுத்துப் பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

2.16 கோடி போலி குடும்ப அட்டைகள்

நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி: நாட்டிலுள்ள 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 60 சதவீத குடும்ப அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 2.16 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதனால், ரூ.13,000 கோடி மதிப்பிலான சலுகைகள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும். குடும்ப அட்டைகளை டிஜிட்டல்மயமாக்கும் பணி முடிவடைந்து விட்டது. பாலில் கலப்படம் செய்வது முக்கியமான பிரச்சினை. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.




ரூ.400 கோடி கள்ள நோட்டு

நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்: இந்திய புள்ளியியல் துறை சார்பில் கள்ள நோட்டுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே தொகை நீடித்திருக்கிறது. கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்கவும், பறிமுதல் செய்யவும் நிதி அமைச்சகம் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு புலனாய்வு, பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து குழு அமைத்துள்ளது.



உளவு பார்க்கும் அமெரிக்கா

உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்: இந்தியாவில் அமெரிக்க உளவு அமைப்புகள் சட்டவிரோதமாக உளவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உயர்நிலை அளவிலான கவனத்துக்கு இதனை இந்தியா எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்க தரப்பும் நமது கவலையை முழு மரியாதையுடன் கேட்டு, நமது உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ளது.



பெருகும் பிளாஸ்டிக் குப்பை

சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் அனில் தவே: 2014-ம் ஆண்டு திட்டக்குழுவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி, நகர்ப்பகுதிகளில் ஆண்டுதோறும் 6.2 கோடி டன் நகராட்சி திடக்கழிவுகள் உருவாகின்றன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி, 2014-15-ம் ஆண்டில் நாட்டில் 5.14 கோடி டன் திடக்கழிவுகள் உருவாகின. இவற்றில் 91 சதவீதம் சேகரிக்கப்பட்டு, 27 சதவீதம் அழிக்கப்பட்டன. 73 சதவீதம் குப்பைக் கிடங்குகளில் சேர்க்கப்பட்டன. தினமும் 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் 9,205 டன் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 6,137 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் குப்பையாகின்றன. பிளாஸ்டிக் குப்பையைக் குறைப்பதற்காக புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறுசுழற்சி, சாலை கட்டுமானத்தில் பிளாஸ்டிக் குப்பைகளின் பயன்பாடு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


நாடாளுமன்றத்தின் இரு அவைகள்நிதியமைச்சர்உள்துறை இணையமைச்சர்கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author