

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறவுள்ள நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் மனு தாக்கல் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இது, ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கில் முட்டுக்கட்டையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜெயலலிதா தனது ஜாமீன் மனுவில், 'எனக்கு 66 வயதாகிவிட்டது. மூத்த குடிமகளான எனக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருக்கின்றன. உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' கோரியிருந்தார்.
இந்த மனுவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்கள் மீதும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில்தான், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்தவர் என்ற முறையில், அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பு தன்னிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதா ஏன் சிறையிலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படது. இதனைத் தொடர்ந்து நால்வரும் கடந்த 20 நாட்களாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 7-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா, ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.