Published : 12 Mar 2014 12:45 PM
Last Updated : 12 Mar 2014 12:45 PM

நக்ஸல்கள் நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பழி தீர்ப்போம்: மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேட்டி

பாதுகாப்புப் படையினர் 15 பேர், பொதுமக்களில் ஒருவர் உட்பட 16 பேரின் படுகொலைக்குக் காரணமான நக்ஸல்களின் தாக்குதலுக்கு நிச்சயம் பழி வாங்குவோம். தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

தாக்குதலை அடுத்து நிலைமையை நேரில் ஆராய ஒரு நாள் பயணமாக ஜக்தால்பூர் வந்த அமைச்சர் ஷிண்டே, நிருபர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிஆர்பிஎப் படையினர் மீது செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல் மக்களவைத் தேர்தலை தடுக்கும் முயற்சியாகும்.

எப்போதும் போலவே இப்போதும் மத்திய படைகளும் மாநில போலீஸாரும் இணைந்து நக்ஸல் வேட்டையில் இறங்குவார்கள், செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் தொடர்புடைய மாவோயிஸ்டுகளை ஒழிப்பது உறுதி. அவர்கள் இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும்.

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் பொதுத்தேர்தலை தடுப்பதற்கான முயற்சியே இந்த தாக்குதல் என்பது எனது கருத்து. சத்தீஸ்கரில் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற அதிகாரிகள் செயல்படுவார்கள். போதிய படைகளை மத்திய அரசு அனுப்பிவைக்கும். சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதல் நடைபெற இருப்பதாக திட்டவட்ட உளவுத் தகவல் எதுவும்.முன் கூட்டியே கிடைக்கவில்லை. உளவுத் தகவல்கள் 3 முறை கிடைத்தன. .ஆனால் அவை துல்லியமானவை இல்லை.

தொடர்ந்து நடைபெறும் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை, வனப்பகுதிகளில் பாதுகாப்புப்படைகளின் நடமாட்டம் ஆகியவை காரணமாக மாவோயிஸ்ட் அமைப்பின் ஆதரவாளர்கள் நடுங்குவதாகவும் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பு பலம் குன்றி விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

சத்தீஸ்கர் நிலவரம் பற்றி முதல்வர் ரமண் சிங், ஆளுநர் சேகர் தத் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இரண்டாவதாக நடந்துள்ள இந்த தாக்குதலும் முன்பு நடந்தது போலவே நிகழ்ந்துள்ளது, இது பற்றி விவாதித்தோம்,

தவறுகள் சில நேரங்களில் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க பாதுகாப்பு படையினர் மிக கவனமாக இருந்து தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வார்கள் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது.

ஒடிஸா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசத்திலும் இதர மாநிலங்களின் சில இடங்களிலும் நக்ஸல் பிரச்சினை உள்ளது. இந்த மாநிலங்களிலும் தமிழகம், கேரளம்,கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் பாதுகாப்புப் படைகளை தேர்தல் பாதுகாப்புக்காக தேவைக்கேற்ப அனுப்பவேண்டி உள்ளது என்றார் ஷிண்டே.

ஷிண்டே கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

நக்ஸல்களை பழி தீர்ப்போம் என மத்திய அமைச்சர் ஷிண்டே தெரிவித்ததில் தவறு இல்லை என்றும் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழைத்தனமான தாக்குதலில் நக்ஸல்கள் ஈடுபடுகிறார்கள் . நாட்டின் ஜனநாயக கொள்கைகளை நக்ஸல்கள் என்றைக்குமே தோற்கடிக்க முடியாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜவாரா டெல்லியில் தெரிவித்தார்.

அஞ்சலி

நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த 15 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், மாநில அரசு அதிகாரிகள் பஸ்தார் மாவட்டம் ஜக்தால்பூரில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, தாக்குதலில் தொடர்புடைய நக்ஸல்களை தேடும் பணி தொடங்கிவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் சுக்மாவில் தெரிவித்தனர். நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த தமது மாநில படை வீரர்கள் 3 பேரின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத்தொகை அறிவித்துள்ளது மத்திய பிரதேச அரசு.

பந்த்: காங்கிரஸ் அழைப்பு

நக்ஸல் தாக்குதலை கண்டித்து சத்தீஸ்கரில் மார்ச் 14ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப் போவதாகவும் அதில் பங்கேற்று வெற்றிபெறச் செய்யுமாறும் தொழில், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

நக்ஸல் தாக்குதல் நடந்தால் வெறுமனே வேடிக்கை பார்ப்பதும், கண்டன வார்த்தைகளை வெளியிடுவதுமே முதல்வர் ரமண்சிங்கின் வாடிக்கையாகி விட்டது என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புபேஷ் பேகல். தெரிவித்திருக்கிறார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x