

பொருளாதார நிபுணரும் நோபல் வென்றவருமான ஜோசப் ஸ்டைகிளிட்ஸ், அயல்நாடுகளில் இந்தியா பற்றிய பிம்பம் சரிவு கண்டுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற, “உலகளாவிய சமத்துவமின்மை: காரணங்களும் விளைவுகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார் ஸ்டைகிளிட்ஸ். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டைகிளிட்ஸ் கூறியதாவது:
இந்தியாவின் புகழுக்கு அயல்நாடுகளில் சில காரணங்களினால் பங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்நாடு அறிய வேண்டும். என்.ஜி.ஓ.க்களுக்கு தடைவிதித்து இயங்க விடாமல் செய்தல், பல்கலைக் கழகங்களில் மாணவர்களை துன்புறுத்துதல் ஆகியவற்றை உலகில் வெகுசில நாடுகளே மேற்கொண்டு வருகின்றன. இந்த நிகழ்வுகள் அயல்நாடுகளில் பொதுமக்கள் கருத்தில் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயல்கள், இந்தியாவை எகிப்து, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளின் எதேச்சதிகாரப் போக்குடன் இணைத்துள்ளன. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கக் கூடாது என்பதே பலரது விருப்பம். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, இந்த நாடுகளுடன் இந்தியாவை இணைத்துப் பேசுவதில் விருப்பம் இல்லை.
இந்தியா ஒரு திறந்தவெளி உலகளாவிய பொருளாதாரமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், தங்களை விளக்கிக் கொள்வதில் இந்தியா முனைப்பு காட்டுவது நல்லது.
மேலும் இந்தியாவில் ஏழை பணக்காரர்களிடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. 1% பணக்காரர்கள் அபரிதமான வளர்ச்சி காண்கின்றனர், மற்றவர்கள் வருவாயோ பின்னடைவு கண்டு கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள்தான் அமெரிக்காவில் டோனல்டு டிரம்ப் போன்ற அரசியல் தலைவர்களை வாழவைக்கிறது.
பொருளாதார சமத்துவமின்மையைப் போக்க, அதிக வளர்ச்சித் திட்டங்கள் தேவை, பணவீக்கம் மீது அதிக கவனம் தேவையில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்ற நலத்திட்டங்கள் வலுப்பெற வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஸ்டைகிளிட்ஸ்.