

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, சிறை நிர்வாகம் முன்பு இன்று சரணடைய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா (79). இவர் 1999-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, 3,206 ஆசிரியர்களை நியமித்த தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது.
சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் சவுதாலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. வரும் 17-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. “உடல்நிலை சரியில்லை என்று ஜாமீன் பெற்றுள்ள சவுதாலா, ஹரியாணா மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகிறார். ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம் ஓம் பிரகாஷ் சவுதாலாவை நேரில் ஆஜராகும்படி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார். அதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் ஓம் பிரகாஷ் சவுதாலா சனிக்கிழமை சிறை நிர்வாகம் முன்பு ஆஜராக வேண்டும். தேர்தல் கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சரியில்லை என்று சிறை நிர்வாகம் கருதினால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, 17-ம் தேதி வரை இருந்த அவரது ஜாமீன் காலம் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது.