முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு
Updated on
1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி (52), ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய நபர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதன்மூலம் இவ்வகை பாதுகாப்பு வழங்கப்படும் நபர்கள் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ் வருபவர்களுக்கு ஆயுதம் ஏந்திய 8 பாதுகாவலர்கள் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

தனது அறக்கட்டளை பணி காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் நீதா. இதனால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை கொடுத்ததையடுத்து, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

எனினும், நீதாவின் கணவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் நபர்கள் பட்டியலில் 60 பேர் உள்ளனர். இதன்படி 20 பேர் பாதுகாப்பு வழங்குவர்.

இதற்கும் மேலாக, உச்சபட்ச பாதுகாப்பு அல்லது ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் மிக முக்கிய நபர்கள் பட்டியலில் 55 பேர் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, ஆயுதம் ஏந்திய 45 பேர் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தப் பட்டியலில் 20 பேர் மட்டுமே இருந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, சிலரின் பாதுகாப்புக்காக அதிக அளவில் செலவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து. இதனால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in