

டைனமிக் கட்டணம் மூலம் பிரீமியம் ரயில்கள் பயணிகளின் பர்ஸை காலி செய்து வருகின்றன. இது ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் 133 பிரீமியம் ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை இப்போது 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் ரயில்களில் டைனமிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் படி மொத்த இருக்கைகளில் 10 சதவீத இருக்கைகள் சாதாரண கட்டணத்தைவிட 10 சதவீத கூடுதல் கட்டணத்திலும், அதையடுத்த 10 சதவீத இருக்கைகளுக்கு 20 சதவீத கூடுதல் கட்டணத்திலும் பிரீமியம் ரயில் முன்பதிவு டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து 40 சதவீதம், 80 சதவீதம், 200 சதவீதம் என ஸ்லீப்பர் கிளாஸ் முன்பதிவு டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இரண்டடுக்கு ஏ.சி, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு சாதாரண கட்டணத்தைவிட 150 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன் லைனில் மட்டுமே பிரீமியம் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியும் என்பதும், ரயிலைத் தவறவிட்டு விட்டால் பணம் திரும்பப் பெற முடி யாது என்பதும் சாதாரண பயணி களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் இருந்து திருநெல் வேலி செல்வதற்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் சாதாரண கட்டணம் ரூ.385. தட்கல் கட்டணம் ரூ.485. அக்டோபர் 1-ம் தேதி சென்னை நெல்லை இடையே இயக்கப்பட்ட பிரீமியம் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் ரூ.1,130 வரை விற்பனையாகியுள்ளது.
இதுபோல மூன்றடுக்கு ஏசி சாதாரண கட்டணம் ரூ.1,000, தட்கல் ரூ.1,270. பிரீமியம் ரயிலில் இது ரூ.3,630-க்கு விற்கப்பட்டுள்ளது. இரண்டடுக்கு ஏசி சாதாரண கட்டணம் ரூ.1,410. தட்கல் ரூ.1,805, பிரீமியம் ரயில் டிக்கெட் ரூ,5,220 ஆக இருந்தது.
சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் சாதாரண கட்டணம் ரூ.315, தட்கல் ரூ.405, அக்டோபர் 1-ம் தேதி சென்னை கோவை இடையே இயக்கப்பட்ட பிரீமியம் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் ரூ.930 வரை விற்பனை யாகியுள்ளது. மூன்றடுக்கு ஏசி சாதாரண கட்டணம் ரூ.805, தட்கல் ரூ.1,065, பிரீமியம் ரயில் டிக்கெட் ரூ.3,010-க்கு விற்றுள்ளது. இரண்டடுக்கு ஏசி சாதாரண கட்டணம் ரூ.1,135. தட்கல் ரூ.1,445, பிரீமியம் ரயில் டிக்கெட் ரூ.3,155 வரை விற்பனையாகியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 46 வழித்தடங்களில் இயக்கப்பட்ட பிரீமியம் ரயில்கள் ரூ.4 கோடியே 50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. டைனமிக் கட்டணம் என்பதால் சாதாரண மக்களுக்கான ரயிலாக பிரீமியம் ரயில்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.