யார் இந்த ‘பெப்பர் ஸ்பிரே’ எம்.பி.?

யார் இந்த ‘பெப்பர் ஸ்பிரே’ எம்.பி.?
Updated on
2 min read

இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை. இனியும் நடக்கக் கூடாது என அனைவரும் கூறும் அளவுக்கு மிளகுப்பொடி ஸ்பிரே சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது. இந்த பரபரப்புக்கு காரணமானவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. லகடபாடி ராஜகோபால்.

ராஜகோபாலை அரசியல் வாதியாக அறிந்துள்ள பலருக்கும், அவரின் மற்றொரு முகம் அவ்வளவாக தெரியாது. அவர் ஒரு தேர்ந்த தொழிலதிபர் என்பதுதான் அது.

சீமாந்திராவுக்கு உட்பட்ட விஜயவாடாவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (50).

மெக்கானிகல் பொறியியல் பட்டதாரி. லான்கோ குழுமத்தின் தலைவரான ராஜகோபாலின் தொழில் சாம்ராஜ்ஜியம், கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெலங் கானா மட்டுமின்றி ஆந்திரப்பிரதேசத்தைத் தாண்டி பிற மாநிலங்களுக்கும் விரிவடைந்துள்ளது. முன்னாள் மாநில அமைச்சர் உபேந்திராவின் மகள் பத்மாவை, ராஜகோபால் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

விஜயவாடா தொகுதி எம்.பி.யாக தொடர்ந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனக்கும் தனது மனைவிக்கும் சேர்த்து இருக்கும் சொத்தின் மதிப்பு ரூ.299 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, அதனை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்த சீமாந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால்தான்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை கொண்டு வர நோட்டீஸ் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ராஜகோபாலின் தொழில் சாம்ராஜ்ஜியம்

1990-களில் தொழில் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கிய ராஜகோபால், கட்டமைப்புத்துறை, மின் உற்பத்தி, சுரங்கம் என பல துறைகளிலும் கால் பதித்தார். கடந்த நிதியாண்டில் அவரது நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.13,887 கோடியாகும்.

சீமாந்திரா பகுதியில் மின் உற்பத்தித் திட்டங்களையும், உலோகக் கலவை ஆலை தொடர்பான திட்டங்களையும் நடத்தி வரும் ராஜகோபால், தெலங்கானா பகுதிக்கு உள்பட்ட ஹைதராபாதில் ரூ.5,500 கோடி மதிப்பிலான லான்கோ ஹில்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் வாங்கி வைத்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனத்தை ராஜகோபால் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு 3.3 கிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. இது டாடா பவரின் மின் உற்பத்தியை (3 கிகா வாட்ஸ்) விட அதிகமாகும். ஆண்டுக்கு 5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யக்கூடிய ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனத்தை ராஜகோபாலின் லான்கோ நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் ராஜகோபால் நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.50,821 கோடியாகும்.

தெலங்கானாவை எதிர்ப்பது ஏன்?

தனது தொழில் நலன்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தெலங்கானாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருவதாக ஆந்திர மாநிலத்தில் பரவலாக பேச்சு உள்ளது.

ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாவட்டங்களின் பல பகுதிகளில் வியாபார ரீதியாக அதிக முதலீடு செய்துள்ளார். எனவே, மாநிலம் பிரிக்கப்பட்டால் தொழில் ரீதியாக பின்னடைவு ஏற்படும் என்பதால், அதற்கு எதிராகப் போராடுகிறார் என தெலங்கானா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் தகவல் அறிந்ததும், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மிளகுப்பொடி ஸ்பிரேயை அடித்து கடந்த வியாழக்கிழமை ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என எவ்வளவோ எடுத்து கூறியும், தனது கட்சித் தலைமையும், மத்திய அமைச்சர்களும் கேட்கவில்லையே என்ற ஆத்திரத்தில் அவர் இதை செய்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், தன்னை தாக்க வந்தவர்களிடமிருந்து தப்பிப் பதற்காகத்தான் மிளகுப்பொடியை தூவினேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது இச்செயலுக்கு தெலங்கானா பகுதியில் பலத்த எதிர்ப்பும், சீமாந்திரா பகுதியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in