

மக்களவைத் தேர்தலின்போது முக்கிய தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தீவிரவாதி யாசின் பட்கலை விடுவிக்க அரசியல்வாதிகளை கடத்தி பிணைக் கைதிகளாக பயன்படுத்த இந்தியன் முஜாகிதீன் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை கூறியுள்ளது.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பட்கல், அவரது நெருங்கிய கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த 2003-ல் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில சிறப்பு போலீஸாரின் விசாரணைக் கைதிகளாக அங்குள்ள சிறையில் உள்ளனர். இவர்கள் தீவிரவாதிகள் பட்டியலில் முக்கியமானவர்கள். பட்கலும், அக்தரும் இன்றி இந்தியன் முஜாகிதீன் முடங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இருவரையும் எப்படியாவது விடுதலை செய்து வெளியே கொண்டுவர பல்வேறு வகையான திட்டங்களை இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் தீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் சூழலை சாதகமாகக் கொண்டு முக்கியமான அரசியல்வாதிகளை கடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை அமைப்புகள், உள்துறை அமைச்சகத்தை எச்சரித்துள்ளன.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘பல அடுக்கு பாதுகாப்பு வளையம் கொண்டிருந்தும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களில் சிலரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பட்கலையும், அக்தரையும் விடுவிக்க கோரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளன.
இந்தத் தகவல் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ரகசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோல் தீவிரவாதிகளை விடுவிப்பதற்காக பிணையாக ஆட்களை கடத்துவது புதிய விஷயம் அல்ல. ஏற்கெனவே சிறையில் இருந்த காஷ்மீர் தீவிரவாதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையதின் மகள் மஹபூபா முப்தி பிணைக்கைதியாகக் கடத்தப்பட்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்திய விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.