

யூ.பி.எஸ்.சி தேர்வில் மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி, மாநிலங்களவையில் அதிமுக, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆங்கில திறனறிதல் தொடர்பான மதிப்பெண்கள், மாணவர்கள் அடுத்த கட்டத் தேர்வில் பங்கேற்பதற்கான தரப்படுத்துதல் மற்றும் தகுதி மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது.
ஆனால், >மத்திய அரசின் இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என கூறி மாநிலங்களவையில் இன்று எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி: "யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் திறமையிருந்தும் முதல்நிலைத் தேர்வை கூட கடக்க முடியாமல் போகிறது. எனவே பிற மொழி மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு யூ.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்விலும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என கூறினார்.
இதே கோரிக்கையை முன்வைத்து அதிமுக உறுப்பினர்களும் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, "அரசு ஒவ்வொரு நாளும் இதே பிரச்சினையை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. ஐ.மு. கூட்டணி அரசு இப்பிரச்சினையை உருவாக்கியது. நாங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்" என கூறினார்.
இருப்பினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், யூ.பி.எஸ்.சி. திறனறித் தேர்வு சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து மக்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.