

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று காலை தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் தொடங்கிவைத்தனர். அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப் பட்டன.
முதல்நாள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. தற்போது கறுப்புப் பணத்தை ஒழிக்க பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏன் இந்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கை. இதற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். எனவே உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவது நிச்சயம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பான்மை மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறை யாக கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக புதிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.