

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்கக் கூடாது. அக்கோயிலை பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை பல ஆண்டுகளாக பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், கோயில் நிர்வாகத்தை தானே ஏற்று நடத்தப்போவதாக அறிவித்த தமிழக அரசு, அதற்காக செயல் அதிகாரியையும் நியமித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், கோயிலை அரசு ஏற்று நடத்துவது சரியான நடவடிக்கைதான் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பொது தீட்சிதர்களும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நீதிமன்ற விசாரணையின் போது சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: “கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த 1951-ம் ஆண்டு முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது, கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சாசனம் சட்டம் பிரிவு 26-ன்படி மதம் சார்ந்த அமைப்பை ஏற்படுத்தவும், அதை நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் முறை கேடு இருப்பதாகத் தெரிய வந்தால், அது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க லாம். அதை விட்டுவிட்டு கோயிலின் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
தமிழகஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், “கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால், கோயிலின் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு சார்பில் செயல் அதிகாரி நியமிக்கப் பட்டார்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் 5-ம் தேதி முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியிடப் பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.போப்டே ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பில், “சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்தக் கூடாது. அக்கோயிலின் நிர்வாகத்தை பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தீர்ப்பு விவரம்:
சிதம்பரம் கோயிலை தானே ஏற்று நடத்த முடிவு செய்து செயல் அதிகாரியை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இச்செயல் சட்டத்துக்குப்புறம்பானது; நியாயமற்றது.
பொது தீட்சிதர்களை நிர்வாகத்திலிருந்து நீக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை செயல்படுத்தக் கூடாது. கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக பொது தீட்சிதர்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
கோயிலில் நிர்வாக ரீதியாக முறைகேடு இருப்பதாகத் தெரியவந்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக நிர்வாகத்தில் அரசு தலையிடலாம். ஆனால், அது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்க வேண்டும். குறைகள் களையப்பட்ட பின்பு, மீண்டும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமே கோயிலை ஒப்படைத்துவிட வேண்டும்.
அந்த வகையில் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டபோது, அக்கோயிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய கால அளவு குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழக அரசின் உத்தரவுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.