Last Updated : 28 Oct, 2015 09:37 AM

 

Published : 28 Oct 2015 09:37 AM
Last Updated : 28 Oct 2015 09:37 AM

ஹர்திக் படேல் செய்தது தேசத் துரோகம்: குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து

படேல் இட ஒதுக்கீடு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேலுக்கு எதிரான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அத்துடன் இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

எனினும், ஹர்திக் படேலுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை யிலிருந்து, இந்திய தண்டனை சட்ட பிரிவு 153 (ஏ) (இரு சமூகத்தினரிடையே பகையை உருவாக்குதல்) புகாரை நீக்கு மாறு உத்தரவிட்டுள்ளது.

ஹர்திக் படேலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி அவரது தந்தை பரத் படேல், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “ஹர்திக் படேல் ஒரு காவலரை கொல்லுமாறு ஒரு இளைஞருக்கு அறிவுரை வழங்கி உள்ளார். வன்முறையைத் தூண்டும், சமூகத்தில் அமைதிக்கு கேடு விளைவிக்கத் தூண்டும் இந்த செயல் தேசத் துரோகத்துக்கு சமமானது. எனவே, அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. விசாரணை முடியும் வரை அவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட முடியாது” என கூறப்பட்டுள்ளது.

படிதர் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் ஒருங் கிணைப்பாளரான ஹர்திக் படேல் மீது சூரத் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ (தேசத் துரோகம்), 115 (வன்முறையை தூண்டுதல்) 153ஏ (இரு சமூகத்தினரிடையே பகையை உருவாக்குதல்) மற்றும் 153-பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தல்) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஹர்திக் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்ட னையும் குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

2 போலீஸார் பணியிடை நீக்கம்

அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸ் கான்ஸ்டபிள் மகேந்திரசிங் ஜவன்சிங், ஹர்திக் படேலுடன் இருப்பது போன்ற படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஜவன்சிங் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், தலைமை காவலர் அருண் டேலும் (கணினி இயக்குபவர்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் உள்ள ஹர்திக்கின் அருகில் இருந்தபடி படம் எடுக்குமாறு அருண் டேலிடம் கூறியுள்ளார் ஜவன்சிங். அந்தப் படத்தில், குற்றப் பிரிவு அலுவலக அறைக்குள் ஹர்திக் அமர்ந்திருக்க அவருக்கு அருகில் சாதாரண உடையில் நிற்கிறார் ஜவன்சிங்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் தீபன் பத்ரன் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்ட நபருடன் படம் எடுத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஒரு காவலர் ஹர்திக் அருகில் நிற்க மற்றொருவர் படம் எடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x