கட்சித் தலைவர் பதவி வேண்டாம்: சிவ்பால் ராஜினாமா கடிதத்தை கிழித்தார் முலாயம் சிங் = குடும்பம், சமாஜ்வாதி கட்சியில் பனிப்போர் நீடிக்கிறது

கட்சித் தலைவர் பதவி வேண்டாம்: சிவ்பால் ராஜினாமா கடிதத்தை கிழித்தார் முலாயம் சிங் = குடும்பம், சமாஜ்வாதி கட்சியில் பனிப்போர் நீடிக்கிறது
Updated on
2 min read

கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்று கூறி சிவ்பால் யாதவ் கொடுத்த ராஜினாமா கடிதத்தை, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் கோபத்தில் கிழித்தெறிந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. தேசியத் தலைவராக முலாயம் சிங் இருக்கிறார். மாநிலத் தலைவர் பதவி முதல்வரும் மகனு மான அகிலேஷ் யாதவிடம் இருந் தது. முலாயம் சிங்கின் மூத்த தம்பி சிவ்பால் யாதவ் பொதுப் பணித் துறை உட்பட சில முக்கிய துறைகளின் அமைச்சராக இருந் தார். இந்நிலையில், சிவ்பால் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் மீது ஊழல் புகார் எழுந்தது. அவர் களை பதவியில் இருந்து நீக்கி னார் அகிலேஷ். இதனால் சிவ்பால் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதையடுத்து சிவ்பால் சிங்கின் அமைச்சர் பதவிகளையும் பறித் தார் அகிலேஷ். மகனின் நடவடிக் கையில் அதிருப்தி அடைந்த முலாயம், கட்சித் தலைவர் பதவியைப் பறித்து தம்பி சிவ்பால் யாதவிடம் கொடுத்தார். இதனால் முலாயம் சிங் குடும்பத்துக்குள் ளும், ஆட்சியிலும் பகிரங்க மோதல் வெடித்தது. இந்நிலையில் லக்னோவில் உள்ள இல்லத்தில் முலாயம் சிங்கை நேற்று சிவ்பால் யாதவ் சந்தித்தார். இருவரும் தனியாக 15 நிமிடங்கள் பேசினர். அப்போது, கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்று கூறி ராஜினாமா கடிதத்தை முலாய மிடம் வழங்கினார். அதை வாங்கி முலாயம் கோபத்தில் கிழித்தெறிந் தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தகவல் வெளியாகவில்லை. ஆனால், முலாயமும் சிவ்பாலும் மீண்டும் சந்தித்து தற்போதுள்ள குழப்பத்துக்கு தீர்வு காண்பார்கள் என்று சமாஜ்வாதி கட்சி தலைமை அலுவலக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இந்நிலையில் சிவ்பால் யாதவ் இல்லத்தின் முன்பு நேற்று நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கூடி அகிலேஷ் யாதவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

சிவ்பால் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘அரசியலில் முலாயம் மிகவும் பிஸியாக இருந்த போது, அகிலேஷ் யாதவை சைக்கிளில் பல மைல் தூரம் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தவர் சித்தப்பா சிவ்பால். அப் படிப்பட்டவரை அகிலேஷ் நடத்தும் விதம் இதுதானா? இதற்காக சிவ்பாலிடம் அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறினர்.

சிவ்பால் உருவம் பதித்த டி ஷர்ட்டுகளை அணிந்த ஆதர வாளர்கள் கூறும்போது, ‘‘முலாயம் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாநிலங்களவை எம்.பி. அமர்சிங்தான் காரணம் என்று கட்சி பொதுச் செயலாளர் ராம்கோபால் கூறியிருக்கிறார். அகிலேஷும் அதையே கூறு கிறார். உண்மையில் பிரச்சினை களுக்கு எல்லாம் காரணம் ராம்கோபால்தான். இந்த விஷயத் தில் அகிலேஷ் மன்னிப்பு கேட்கா விட்டால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். தீக் குளிக்கவும் செய்வோம்’’ என்றனர்.

பரபரப்பான சூழ்நிலையில் சமாஜ்வாதி எம்எல்ஏ.க்கள், அமைச்சர்கள், சபாநாயகர் மாதா பிரசாத் பாண்டே ஆகியோர் சிவ்பால் யாதவை அவரது இல்லத் தில் நேற்று சந்தித்து பேசினர்.

முன்னதாக கடந்த வியாழக் கிழமை சிவ்பால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற் கான கடிதத்தை அகிலேஷிடம் வழங்கினார்.

அதேபோல் சிவ்பால் யாதவின் மனைவி சரளா தனது எடாவா கூட்டுறவு சம்மேளனத் தலைவர் பதவியையும் இவர்களது மகன் ஆதித்யா உத்தரப் பிரதேச கூட்டுறவு சம்மேளனத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வ தாக தனித்தனி கடிதங்களை முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவற்றை அகிலேஷ் நிராகரித்து விட்டார்.

முலாயம்தான் ‘பாஸ்’ : சிவ்பால் உறுதி

சமாஜ்வாதி மாநில தலைவராக தம்பி சிவ்பால் யாதவை, முலாயம் சிங் நியமித்தார். இதனால் முதல்வர் அகிலேஷுக்கும் சிவ்பாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றி உள்ளது. இந்நிலையில், சிவ்பாலின் ஆதரவாளர்கள் நேற்று அவரது இல்லத்துக்கு வெளியில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் சிவ்பால் பேசும்போது, ‘‘சமாஜ்வாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட மாட்டேன். கட்சி தலைவர் முலாயமுக்கு பக்கபலமாக இருப்பேன். அவரது சொல்படியே செயல்படுவேன். எனக்கு முலாயம்தான் ‘பாஸ்’. வேறு யாரும் இல்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in