

பாஜகவின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 67 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி விரும்பிய போபால் தொகுதி ஒதுக்கப்படாமல் காந்திநகரே அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியாக குஜராத்தின் வடோதரா அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிடுகிறார்.
பாஜகவில் இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹேமமாலினி உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் போட்டியிடுகிறார். தற்போது அங்கு ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவர் அஜீத் சிங்கின் மகனான ஜெயந்த் சவுத்ரி எம்பியாக இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தின் ஆன்மிக நகரங்களில் முக்கியமான மதுரா, கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. அயோத்தி, வாரணாசி, அலகாபாத்துடன் மதுராவையும் இந்த முறை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி குஜராத் காந்திநகர் தொகுதியில் ஐந்தாவது முறையாக எம்.பி.யாக உள்ளார். இந்தமுறை தனக்கு மத்தியப் பிரதேச தலைநகர் போபால் தொகுதியை அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது. எனினும், அவருக்கு காந்திநகரையே பாஜக தலைமை மீண்டும் ஒதுக்கியுள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுனா மற்றும் பத்ம விருதுகளை பெற்ற இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஜெகதாம்பிகா பால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த தினமே வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் தும்மரியாகன்ச்சில் ஜெகதாம்பிகாபால் போட்டியிடுகிறார்.