

கடந்த சில நாள்களாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரேக்கும் இடையே கருத்து மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் புதன்கிழமை நிருபர்களிடம் பேசிய கேஜரிவால், ‘நேற்று வெளியான வீடியோ என்னை மிகவும் பாதித்துள்ளது. எனது குருவான ஹசாரேயே கூறுவதும் என் நேர்மையை சந்தேகிப்பதும் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது’ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "என் மீது எழும் ஊழல் புகார் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளத் தயார்" என்றும் கேஜரிவால் கூறினார்.
ஹசாரே பதில்:
இது பற்றி தனது சொந்த ஊரான ராலேகவ்னில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே, ‘அரவிந்தையும் என்னையும் களங்கப்படுத்த சதி நடக்கிறது. கேஜரிவாலை ஊழல் பேர்வழி என நான் கூறவில்லை.’ என மறுத்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன் கேஜரிவாலுக்கு ஹசாரே கடிதம் எழுதினார். அதில், அவர் மீது பல புகார்களை கூறி பதில் கேட்டிருந்தார்.
இதை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் தனது சகாக்களுடன் அண்ணா அமர்ந்து பேசுவது போல் ஒரு வீடியோ வெளியானது. அதில், பொதுமக்கள் அவரது போராட்டத்திற்காக அளித்த ரூபாய் மூன்று கோடியை கேஜரிவால், தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என அண்ணா கருத்து கூறுவது போல் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றிய மகாராஷ்டிரத்தின் ராஜூ என்பவர், இது போல் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மேலும் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்.