Published : 21 Feb 2014 03:39 PM
Last Updated : 21 Feb 2014 03:39 PM

மானிய விலை சிலிண்டர்களுக்கு ஆதார் கணக்கு அவசியம் இல்லை: வீரப்ப மொய்லி

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் கணக்கு அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்திற்கு ஆதார் கணக்கு இணைப்பை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நேரடி மானியத் திட்டத்தைப் பொறுத்தவரை, மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் ஆதார் கணக்கு இணைப்பை நீக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மானிய விலை சிலிண்டர்களை இனி ஆதார் கணக்கு இல்லாமல் பெறலாம்.

நேரடி மானியத் திட்டத்தில், வங்கிகளில் மானியம் செலுத்துவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வங்கிகளில் ஒரு சிலிண்டருக்கான மானியமாக ரூ.435 செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சிலிண்டருக்கான மானியம் ரூ.700 ஆக உயர்ந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

மானிய விலை சிலிண்டர் விலை ஏற்றம் செய்யப்படவில்லை என்பதையும் அவையில் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஒரே முகவரியில் இரண்டு சிலிண்டர்கள் பெறப்படும் நிலையில், அந்த வீட்டில் தனித்தனி சமையலறை பயன்பாட்டில் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர் உறுதிபட தெரிவித்தால் அது அனுமதிக்கப்படும் என்று மொய்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x