

ஒரு பெண் குழந்தையின் மதிப்பைக் காட்டிலும் தேர்தலில் பதிவாகும் ஒரு வாக்கின் மதிப்பு அதிகம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று (புதன்கிழமை) ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சரத் யாதவ், "ஒரு பெண் குழந்தையின் மதிப்பைக் காட்டிலும் தேர்தலில் பதிவாகும் ஒரு வாக்கின் மதிப்பு அதிகம்" எனப் பேசியிருந்தார்.
அவரது சர்ச்சைக் கருத்து குறித்து புகார் ஏதும் எழாத நிலையிலும் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், "பொறுப்பான பதவியில் இருக்கும் நபர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல கடும் குற்றமும்கூட. இது தொடர்பாக சரத் யாதவ் 24 மணி நேரத்துக்குள் சரத் யாதவ் இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ விளக்கமளிக்க வேண்டும். தவறினால், நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.