Published : 14 Feb 2014 09:40 am

Updated : 06 Jun 2017 19:31 pm

 

Published : 14 Feb 2014 09:40 AM
Last Updated : 06 Jun 2017 07:31 PM

ஆந்திர சட்டசபையில் அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்: மறு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு

2

ஆந்திர சட்டசபையில் கடும் அமளிக்கு நடுவே 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மறு தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலையில் அவை கூடியதும், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி டிஆர்எஸ் உள்ளிட்ட அப்பகுதி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இருக்கையில் அமருமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காததால் ஒரு மணி நேரத்துக்கு அவையை சபாநாயகர் என். மனோகர் ஒத்திவைத்தார்.


அவை மீண்டும் கூடியபோதும் அதே நிலை நீடித்தது. கூச்சல் குழப்பத்துக்கு நடுவே நிதியமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டி, ஆந்திரப் பிரதேச நிதி ஒதுக்கீடு மசோதா 2014 (வோட் ஆன் அக்கவுன்ட்) மற்றும் ஆந்திரப் பிரதேச நிதி ஒதுக்கீடு மசோதா 2014 (எல்.ஏ. மசோதா எண் 2) ஆகியவற்றை தாக்கல் செய்தார். அந்த 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மறு தேதி குறிப்பிடாமல் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ஆந்திரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய அரசு அமைந்து, அடுத்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அத்தியாவசிய செலவை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை (வோட் ஆன் அக்கவுன்ட்) நிறைவேற்றுவதற்காக கடந்த திங்கள்கிழமை அவை கூடியது.

இந்த குறுகிய கால கூட்டத் தொடர் வியாழக்கிழமையுடன் முடிக்க திட்டமிடப் பட்டிருந்தது. தெலங்கானா பிரச்சினையால் தொடர்ந்து அமளி நிலவியதால் மசோதாவை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தெலங்கானா எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி

மக்களவையில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். அதேநேரம், சீமாந்திரா பகுதி எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

"தெலங்கானா மக்களின் 60 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த சோனியா காந்திக்கு நன்றி" என மாநில செய்தித்துறை அமைச்சர் டி.கே. அருணா தெரிவித்தார்.

டிஆர்எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தெலங்கானா மாநிலம் அமைவது உறுதி. இதுகுறித்து எந்தக் கவலையும் வேண்டாம். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த எம்எல்ஏ இ.தயாகர் ராவ் கூறுகையில், "தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசுக்கு நன்றி. அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இதர பிரிவினரின் அயராத முயற்சியால் தெலங்கானா தனி மாநில கனவு நிறைவேறப் போகிறது" என்றார்.

3 காங். எம்எல்ஏக்கள் விலகல்

தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலோர ஆந்திரத்தைச் சேர்ந்த அதால பிரபாகர் ரெட்டி, ஸ்ரீதர் கிருஷ்ணா ரெட்டி மற்றும் பி. சத்யநந்த ராவ் ஆகிய 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை கட்சியிலிருந்து விலகினர்.

தெலங்கானா பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு நோட்டீஸ் கொடுத்த சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 6 காங்கிரஸ் எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆந்திர சட்டசபைஅமளி2 மசோதாக்கள் நிறைவேற்றம்அவை ஒத்திவைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x