விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்: வைகோ

விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்: வைகோ
Updated on
1 min read

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்று வைகோ கூறியுள்ளார்.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 14-ம் நாளான இன்று விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டிருந்தபோது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், '' இதே ஜந்தர் மந்தரில் இலங்கைத் தமிழர்களுக்காக 20 போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். ஆனால், கழுத்தில் மண்டை ஓடுகளை கட்டிக்கொண்டு, கோவணம் கட்டிக்கொண்டு போராடுவது எனக்குத் தெரிந்த வரையில் டெல்லி சரித்திரத்திலேயே கிடையாது.

தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகள்தான் இவர்கள். ஏதோ 300 பேர் இருக்கிறார்கள் என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். நான் ஒரு விவசாயியாகவே வந்திருக்கிறேன். இவர்களோடு சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். நான் கட்சி பற்றி பேசவில்லை.

மாநில அரசு நிவாரண நிதி தொடர்பாக நிறைய முயற்சிகள் எடுத்தன. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அருண் ஜேட்லியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை கொடுக்க உள்ளேன். மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றால், விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்'' என்று வைகோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in