காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: பிரதமர் புறக்கணிப்பு

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: பிரதமர் புறக்கணிப்பு
Updated on
1 min read

'தமிழகத்தின் அழுத்தம் எதிரொலியாக இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்தியக் குழு கொழும்புவுக்குச் செல்லும்' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங் தனது முடிவு குறித்து இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் மூலம் தெரிவிப்பார் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னரே, பிரதமரின் புறக்கணிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். அதேவேளையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரதமருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார். அவரது தலைமையில் கொழும்பு பயணம் செல்லும் இந்தியக் குழுவில், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், கூடுதல் செயலாளர்கள் பவண் கபூர், நவ்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இடம்பெறுவர். தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் வலியுறுத்தல்கள் காரணமாக, இலங்கைக்குச் செல்வதில்லை என்று பிரதமர் முடிவெடுத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேச நலனின் அடிப்படையில் அம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடரஜன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், காமன்ல்வெத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அதேவேளையில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கை பாதிக்காத வகையில் பிரதமர் இலங்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒரு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று இன்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியது கவனத்துக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in