Published : 21 Sep 2016 12:15 PM
Last Updated : 21 Sep 2016 12:15 PM

காவிரி பிரச்சினை: சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்க அம்மாநில பாஜக முடிவெடுத்துள்ளது.

முந்தைய கூட்டங்களில் எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளை சித்தராமையா புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டிய பாஜக. சட்டமன்றக் கூட்டத்தை தொடங்க வேண்டுமே தவிர, அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயனில்லை என்று கூறியுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தையடுத்து விதான் சவுதா, முதல்வர் இல்லம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து வன்முறைகளை தடுக்கும் நோக்கத்துடன் பெங்களூருவில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது மைசூரு ரோடு, ஹெக்கனஹள்ளி, ராஜகோபால் நகர் பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுபானத் தடை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சித்தராமையா திட்டவட்டம்

முன்னதாக, 'தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது மிகவும் கடினமானது. இந்த விவகாரத்தில் கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும்' என அம்மாநில‌ முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் காவிரி மேற்பார்வைக் குழு வரும் 30-ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 27- ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்துவது கடினமானது.

கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் எடுத்துக்கூறியும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் 4 வாரம் கெடு விதித்திருக்கிறது.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தையும், எம்எல்ஏ., எம்.பி.க்கள் கூட்டத்தையும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும் கூட்டியுள்ளேன். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

எனவே கர்நாடக மக்களும், கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். கர்நாடக மக்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே கர்நாடக அரசுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார் அவர்.

கர்நாடகாவில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா கூறும்போது, ''கர்நாடகாவில் குடிப்பதற்கு குடிநீர் நீர் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனக்கூறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் சித்தராமையா ஆட்சியை இழந்து சிறைக்கு சென்றால் நாங்களும் அவருடன் சிறைக்கு செல்வோம். எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரை கூட தரக்கூடாது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x