

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு நகல் தயாராகிவிட்டாலும், உடனே தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன. இதன் அடிப்படையில், பீட்டா, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் ரேக்ளா போட்டிகளுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்கு தடை விதித்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடை பெறவில்லை.
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க ஏதுவாக, மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு, 2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டதால், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் குழு சார்பில் தொடரப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தியது. இதன் தீர்ப்பு, கடந்த டிசம்பர் 5-ம் தேதி தேதி குறிப் பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பை வெளியிட வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் குழுவினர் வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர்கள், தீர்ப்பை உடனே வெளியிட வேண்டும் என்று கோரினார். அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தீர்ப்பு நகல் தயாராகி விட்டது. இருந்தாலும், சனிக்கிழமைக்கு முன்பாக தீர்ப்பை வெளியிட முடியாது. மேலும், தீர்ப்பை உடனே விரைந்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு நெருக்கடி தருவது நியாயமற்றது” என்று தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களின் கோரிக் கையை ஏற்க நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.