

திருப்பதியில் 200 ஏக்கர் பரப்பளவில் அறிவியல் அருங்காட்சியகத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அடிக்கல் நாட்டினார்.
திருப்பதி பைபாஸ் சாலையில் எஸ்.வி மிருகக்காட்சி சாலை அருகே 200 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது: ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதியில், அவரது பாதத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளது. இதற்கு ‘பிரம்மாண்ட் சயின்ஸ் மியூசியம்’ என பெயர் சூட்டப்படுகிறது. 7 மலைகளை குறிப்பிடுவதைப்போல், இங்கு 7 உருண்டை வடிவில் அரங்குகள் அமைக்கப்படும். ஒவ்வொன்றும் விண்வெளி அறிவியல், விவசாய அறிவியல், ஏவுகணை அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல், ஆயுர்வேத அறிவியல் என 7 அறிவியல் கோளங்கள் அமைக்கப்படும்.
8-வதாக ஏழுமலையானின் பெருமைகளை விளக்கும் கோள மும் அமைக்கப்படும். இதற்கான பணிகள் அடுத்த 30 மாதங்களில் நிறைவடையும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
திருப்பதியில் 200 ஏக்கரில் அமைய உள்ள பிரம்மாண்ட அறிவியல் அருங்காட்சியகத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.