

டெல்லியில் கடந்த வாரம் அதிவேகமாக சென்ற துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கார் மடக்கி நிறுத்தப்பட்டு, ரூ.400 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுபற்றி டெல்லி காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) சந்தீப் கோயல் நேற்று கூறும்போது, “கடந்த 12-ம் தேதி மாலை கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியில் டிஎல் 10 சிஏ 0017 என்ற பதிவு எண் கொண்ட டெல்லி துணை முதல்வரின் கார் அதிவேகமாக செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதையடுத்து போக்குவரத்து காவலர் ஒருவர் பைக்கில் அந்த கரை விரட்டிச் சென்றார்.
பிறகு காரின் ஓட்டுநருக்கு ரூ.400 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் காரில் இருந்தார்” என்றார்.
சமீப காலத்தில் அதிவேக பயணத்துக்காக எத்தனை வி.வி.ஐ.பி.க்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கேட்டதற்கு, “ஓட்டுநர்களின் பெயரிலேயே அபராத ரசீது வழங்கப்படுகிறது. எனவே எத்தனை வி.ஐ.பி.க்கள் என்று கணக்கிடுவது சிரமம்” என்றார் கோயல்.