

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாதது, காங்கிரஸ் கட்சி தோல்வி பயத்தால் உறுதியற்று இருப்பதையே காட்டுகிறது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், "மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற 10 வருட காலத்தில் ஏழு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு ப.சிதம்பரத்தின் நிதிக்கொள்கைகளே காரணம். ஒளிர்ந்து கொண்டிருந்த இந்தியாவை நிதியமைச்சர் சிதம்பரம் அஸ்தமனமாக்கிவிட்டார்.
பொருளாதார மேதை மன்மோகன் சிங், மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரின் கொள்கைகள்தான் இந்திய பொருளாதாரத்தை திணறவைத்துள்ளது.
தமிழகத்தில் பாஜக அமைத்துள்ள கூட்டணியை பார்த்த மற்ற கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை நாட்டில் கொண்டுவரும்" என்றார் நிர்மலா சீதாராமன்.
முன்னதாக, தமிழகத்தில் 30 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இம்முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக, சிவகங்கை தொகுதியில் அவருடைய மகன் கார்த்தி ப.சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஏழு முறை வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாதது கவனிக்கத்தக்கது.