

ஆந்திராவில் ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பார்வையிடுகிறார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹுத்ஹுத் புயல் 185 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. இதனை அடுத்து அங்கு பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் வீடுகளின் கூரை இடிந்து விழுந்தது, மரங்கள் முறிந்து விழுந்தது போன்ற சம்பவங்களில் சிக்கி 5 பேர் பலியாகினர். பல இடங்கள் மோசமான சேதம் காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், புயல் பாதித்த விசாகப்பட்டினத்தின் நிலை குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தான் பார்வையிட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்திராவின் நிலை குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அவ்வப்போது கேட்டறிந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புயல், நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுலம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஆந்திர மாநில அமைச்சர்கள் இன்று செல்கின்றனர்.
சமீபத்திய வானிலை ஆய்வுத் தகவலின்படி, ஹுத்ஹுத் புயல் சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சின்னம் தென்கிழக்கு ஒடிசா வழியே வடமேற்கு திசைக்கு நகர்ந்து மெதுவாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.