Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

ஆதர்ஷ் ஊழல் விசாரணை அறிக்கை ராகுல் முடிவுக்கு சோனியா ஆதரவு

புது டெல்லிஆதர்ஷ் ஊழல் குறித்த விசாரணை கமிஷனின் அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

அந்த அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்ததை விமர்சித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்தார். இந்நிலையில், சோனியா காந்தியின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் 128-வது ஆண்டு தொடக்க நாள் விழாவையொட்டி டெல்லியில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் சோனியா காந்தி சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகளின் தவறுகளை ஊடகங்கள் தாராளமாக சுட்டிக் காட்டலாம். அதே போன்று, பிற கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளின் ஊழல்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்” என்றார்.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பான விசாரணை கமிஷனின் அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்துவிட்டதைக் குறித்து கேட்டபோது, “அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்துவிட்டோம். விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் தலைமையில் அமைக்கப்பட்ட இரு நபர் விசாரணை கமிஷன், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 3 முன்னாள் முதல்வர்கள் உள்பட பல அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு நிராகரித்து விட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஆதர்ஷ் ஊழல் விசாரணை அறிக்கையை நிராகரித்தது தொடர்பான தனது நிலைப்பாட்டை மகாராஷ்டிர அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார். அப்போது மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாணும் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x