

ஆம் ஆத்மிக்கு இனி ஒருமுறை ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்று அக்கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன், "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு கிடைக்கும். நாங்கள் உண்மையான அரசியல் செய்கிறோம்.
பொய் வாக்குறுதிகளை கூறவில்லை. மற்ற கட்சிகளைப் போல நாங்கள் சிறுபிள்ளைத்தனமாக அரசியலில் ஈடுபடவில்லை" என்றர் அஜய் மாக்கன்.
கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அந்த கட்சிக்கு இம்முறை ஆதரவு அளிக்க தயாரா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அஜய் மாக்கன், "ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. இனி எப்போதுமே அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இல்லை.
போட்டியில் காங்கிரஸ் இல்லை என்பது ஊடகங்களின் பார்வையாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் வெறும் பொய் என்று நிரூபிக்க நேரம் வந்துவிட்டது. அந்தக் கட்சிகளுக்கு காங்கிரஸ் மட்டும்தான் போட்டி" என்றார் அஜய் மாக்கன்.
மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்: சோனியா
டெல்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட மத்திய டெல்லியின் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அவர்களின் விருப்பம் என்னவோ அவை மட்டுமே நடக்கும்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அர்விந்தர் சிங் லவ்லி, கிரன் வாளியா ஆகியோர் உடனிருந்தனர்.