

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது வழக்கம். சில சமயம் போட்டியில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுவதும் உண்டு.
மூத்த அரசியல்வாதிகள், குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்கள் என முக்கியப் பிரபலங்கள் இதில் போட்டியிடுவது உண்டு. இதுவரை இருந்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில், இதற்கான வேட் பாளர்களை அரசியல் கட்சிகள் தான் அடையாளம் காட்டி வந்தன. அவர்களாக யாரும் போட்டியிட முன் வந்ததில்லை. கடந்த முறை இந்த கலாச்சாரம் உடைந்தது. ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் பதவிகளை போன்று குடியரசுத் தலைவர் பதவிக்கும் சில அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் கலாச்சாரம் உருவாகி விட்டதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தப் பதவிக்கான புதிய வேட்பாளர்கள் யார் என அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடி வடையும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகே தெரியவரும்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “தற்போதுள்ள நில வரப்படி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குகளில் எங் களுக்கு 2 சதவீதத்துக்கும் அதிக மான பெரும்பான்மை உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஐந்து மாநில தேர்த லுக்கு பிறகு எங்களின் பெரும் பான்மை அதிகரிக்க வாய்ப்புள் ளது. இதன் பிறகு குடியரசுத் தலை வருக்கான வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். எங்களை போன்றே எதிர்கட்சிகளும் கருது வதால் 5 மாநிலத் தேர்தலுக்கு பிறகே இது முடிவாகும் என கருதுகிறோம்” என்று தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களிப் பார்கள். இத்தேர்தலில் அதிக உறுப்பினர்களை கொண்ட உ.பி. முக்கிய அங்கம் வகிக்கும். 404 உறுப்பினர்கள் கொண்ட உ.பி. சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. உ.பி. சட்டப்பேரவையில் பாஜக வின் பலம் தற்போது 41 ஆக உள்ளது. தேர்தலுக்கு பிறகு பாஜகவின் பலம் அதிகரிக்கும் என அக்கட்சி நம்புகிறது. இத்துடன் பஞ்சாப், கோவா, குஜராத் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தராகண்ட் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நிலவுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை (பிரதிபா பாட்டீல்) காங்கிரஸ் கூட்டணி நிறுத்தியதை போல இந்தமுறை தாமும் பெண் வேட்பாளரை நிறுத்தலாமா என பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் மக்களவை யின் தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெயரும் அடிபடுவதாக தெரியவந்துள்ளது.