

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் அவர் சிறையில் இருந்து இன்றைக்கே விடுதலையாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ள தீர்ப்பு நகல் மாலை 7 மணியளவிலேயே அவர் தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்படுகிறது.
எனவே அதன் பின்னர் தீர்ப்பு நகலை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பித்து, ஜெயலலிதாவை விடுவிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே பெரும்பாலும், ஜெயலலிதா நாளை காலையோ அல்லது மாலையோ விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடக சிறைத்துறை தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தி, ஜெயலலிதாவை இன்றே விடுவிக்க முடியும். ஆனால் அவ்வாறு கர்நாடக சிறைத்துறை செய்யுமா என்ற கேள்வியும் நீதித்துறை வட்டாரங்களில் நிலவுகிறது.
பரப்பன அக்ரஹார பகுதியில் 144
இன்று அதிமுக 43-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதேவேளையில் உச்ச நீதிமன்றமும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் பரபரப்பால் பரப்பன அக்ரஹார சிறைப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.