

தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க கடுமையான விதிகளுடன்கூடிய புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணை யர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், கோவா, பஞ்சாப், மணிப் பூர் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்த 5 மாநில தேர்தல் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நசீம் ஜைதி அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடத்தை விதிகள் அதிக மாக மீறப்படுகின்றன. இதை தடுக்க கடுமையான விதிகளுடன்கூடிய புதிய சட்டத்தை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று கூறுவது தவறு. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் ஆணையம் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் வெவ்வேறான சூழ்நிலைகள் எழுகின்றன. எனவே தேர்தல் தொடர்பாக நீதிமன்றங்கள் ஏற் கெனவே வழங்கிய தீர்ப்புகளை வழிகாட்டியாக பின்பற்றி வருகிறோம்.
சில அரசியல் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் புறக்கணிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்கள் தவறானவை. எல்லோரையும் சமமாகப் பாவித்தே நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்யும் ஒருவர் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, நட்சத்திர பிரச்சாரகர்கள் நிலையி லான புகார்களை மட்டுமே விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.