

காவிரி மேற்பார்வை குழு முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: காவிரி மேற்பார்வை குழு கடந்த 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இந்த 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களின் பாசனத்துக்கு போதாது. கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவு குறித்து எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் எதிர்ப்பு
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாத நிலையில் இம்மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது என கர்நாடக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த குமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து மனு அளித்தார். அப்போது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன், கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஆகியோரும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது எனவும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனே கர்நாடக பாஜக தலைவர்களுடன் சென்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தை சேர்ந்தவரும் மூத்த பாஜக தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கர்நாடகாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.