

உ.பி.யில் முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மதச்சார்பின்மையின் பொருள் ஒரு மதத்தின் மீதான அபிமானமல்ல என்று கூறியுள்ளார்.
மேலும் முந்தைய உ.பி. ஆட்சியாளர்கள் சாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளை கடைபிடித்ததாக கடுமையாக சாடினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் யோகி ஆதித்யநாத் பேசிய போது, “வாக்கு வங்கி அரசியலால் தேசப்பற்றாளர்களான ராம் பிரசாத் பிஸ்மில், ஆஷ்ஃபகுல்லா கான், அப்துல் ஹமித் போன்றோர் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை.
நாம் உண்மையாக மதச்சார்பற்றவர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், சாதி, மதம் மீது மட்டுமே அபிமானம் கொள்ள முடியாது. முந்தைய சமாஜ்வாதி, பகுஜன் அரசுகள் சாதி மதம் ரீதியாக பாகுபாடுகளை மேற்கொண்டது.
ஆனால் எங்களுக்கு மதம், சாதி போன்றவை கிடையாது” என்றார்.
அதே போல் மாநில இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு பெயர வேண்டிய அவசியமில்லை, இங்கேயே மரியாதைக்குரிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றார்.
அரசியலை குற்றவயமக்குதலும், குற்றவாளிகளை அரசியல்வயமாக்குவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முடிகிறது. எனவே எங்கள் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பாயும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
உ.பி.யில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு பேசினார் ஆதித்யநாத்.