Published : 05 Dec 2013 03:24 PM
Last Updated : 05 Dec 2013 03:24 PM

வட மாநிலங்களில் மூன்றை வசப்படுத்தும் பாஜக: கருத்துக்கணிப்பு

டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஏசி நீல்சன் (AC Nielsen) உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிநதைய கருத்துக் கணிப்பில், 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் உள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இவற்றில், மிசோரம் மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்பு ஏதும் நடத்தப்படவில்லை.

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 230 தொகுதிகளில் 114 இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் 77 இடங்களைப் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தேர்தல் பிரச்சாரங்களின் போது நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங் தலைமையிலான பாஜக-வுக்கு 3-வது முறையாக வெற்றி கிட்டும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. கருத்துக் கணிப்பின் படி 70 தொகுதிகளில் பாஜக - 50 இடங்களை கைப்பற்றும், காங்கிரஸ் 37 இடங்களை கைப்பற்றும். இந்தக் கருத்துக் கணிப்பு துல்லியமானது என்றால் இந்த நிலவரம் கடந்த 2008-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு நிகரானதாகும்.

ராஜஸ்தானில், 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 138 இடங்களை பாஜக கைப்பற்றும். காங்கிரசுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிட்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக-வுக்கே வெற்றி வாய்ப்பு என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு யாருக்கும் பெரும்பாண்மை இல்லை என்பதை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. 70 தொகுதிகளில் பாஜக-வுக்கு 33-ம்; காங்கிரசுக்கு 19-ம்; ஆம் ஆத்மி கட்சிக்கு 18-ம் வசப்படும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குப்பையில் வீசுங்கள்:

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பாஜக-வுக்கு வெற்றி முகம் என வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் முற்றிலும் அர்த்தமற்றது என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x