சுதந்திர இந்தியாவில் அதிக இன்னல்களை அனுபவித்தது பாஜக: மோடி வேதனை
பிரிட்டிஷ் ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சி அனுபவித்த துயரத்தைவிட, சுதந்திர இந்தியாவில் அதிக இன்னல்களை பாஜக அனுபவித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜகவின் புதிய தலைமையகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட ஒரே கட்சி பாஜகதான். பாஜக ஒவ்வொரு திருப்புமுனையை எட்டியபோதும் பல்வேறு துன்பங்களை அனுபவித்தது. இன்னும் சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சிகூட பாஜக எதிர்கொண்டது போன்ற இன்னல்களை சந்தித்திருக்காது.
சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளர்கள் அலுவலகங்களை வாடகைக்கு எடுப்பதற்குக்கூட மிகவும் சிரமப்பட்டனர். ஆளும் கட்சியினர் (திரிணமூல் காங்கிரஸ்) தாக்கக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சுதந்திரத்துக்குப் பிறகு பாஜகவைப் போல நாட்டுக்காக தியாகம் செய்த கட்சி வேறு எதுவும் இல்லை” என்றார்.
மோடி பேச்சுக்கு காங். கண்டனம்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “சுதந்திரத்துக்குப் பிறகு பாஜக அதிக இன்னல்களை சந்தித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுதந்திரப் போராட்டத்தை அவர் சிறுமைப்படுத்தி உள்ளார். நாட்டின் பிரதமர் இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. பிரதமர் இந்தக் கருத்தை திரும்பப் பெறுவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
