

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ைஆழ்வார் திருமஞ்சன சேவை நேற்று நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 3-ம் தேதி பிரம்மோற்சவம் கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆகம விதிகளின் படி கோயில் வளாகம் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப் படுத்தும் ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சன’ நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் வாசனைப் பொருட்களான பச்சை கற்பூரம், சந்தனம், பன்னீர் மற்றும் மஞ்சள், குங்குமம் போன்றவற்றால் கோயில் வாளகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
மேலும் மூலவர் சன்னதி, தங்க விமான கோபுரம், பலி பீடம், கொடி மரம் மற்றும் கோயிலுக்குள் உள்ள பல்வேறு சன்னதிகளும் சுத்தப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதல வாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் அறங்காவலர் குழு உறுப் பினர்கள், தேவஸ்தான அதிகாரி கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.