

ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களை மிரட்டி வரும் பைலின் புயல், பயங்கர சூறாவளியாக மாறி ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே இன்று மாலை கரையைக் கடக்கிறது.
இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள சக்திவாய்ந்த பைலின் புயல், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 530 கி.மீ. தொலைவிலும், பாரதீப்பிலிருந்து தெற்கு, தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்த நிலையில், மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒடிசா மாநிலம் அருகே உள்ள கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை 6 மணியளவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பைலின் புயல் கரையைக் கடக்கும்போது, 205 முதல் 220 கி.மீ வேகத்தில் காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் 1.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கொட்டித்தீர்க்கும் மழை...
பைலின் புயல் தாக்குவதற்கு முன்பாகவே இன்று காலையில் இருந்து ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தாழ்வானப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆந்திரத்தில் உஷார் நிலை
ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளத்தில் இன்று காலை 52,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சுமார் 25,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரு மாநிலங்களிலும் புயலை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு பேரிடர் மேலாண்மை படையினர் மற்றும் ராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளனர்.