தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தை மத்திய அரசிடமும் ராணுவத்திடமும் விடுவதே சிறந்தது: உச்ச நீதிமன்றம்

தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தை  மத்திய அரசிடமும் ராணுவத்திடமும் விடுவதே சிறந்தது: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி ஆதாரங்களை அரசு நிறுத்த வேண்டும் என்று கோரிய பொதுநல மனுவை கடும் எச்சரிக்கையுடன் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேசப்பாதுகாப்பு என்பது நீதிமன்றத்தின் வேலையல்ல, அது மத்திய அரசு, ராணுவம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளது.

மனுதாரரும் வழக்கறிஞருமான எம்.எல்.ஷர்மாவின் பொதுநல மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

“தேசப்பாதுகாப்புக்கு என்ன செய்வது என்பதை ஆட்சியாளர்களிடமும் ராணுவத்திடமும் விடுவதே சிறந்தது. இதிலெல்லாம் கோர்ட்டிற்கு குறைந்தபட்ச பங்கே உள்ளது. இவையெல்லாம் தேச அளவில் உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களாகும், இது தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

ஒரு கைது செய்யப்பட்டால் அல்லது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் மட்டுமே ‘பயங்கரவாதிகள்’ என்று கூற வேண்டும். எனவே நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது.

பாதுகாப்பிற்கோ அல்லது பிறவற்றிற்கோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி அளிப்பது என்பது மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பது. எனவே இத்தகைய பொதுநல மனுக்களை எந்த நீதிமன்றமும் ஊக்குவிக்கக் கூடாது” என்று கடுமையாகக் கூறி மனுவை நிராகரித்தார்.

விசாரணையின் போது மனுதாரரும் வழக்கறிஞருமான ஷர்மா, காஷ்மீர் பிரிவினைவாதிகளை தேசப்பாதுகாப்புக்கு “பெரிய அச்சுறுத்தல்” என்று கூறினார்.

இதற்குக் குறுக்கிட்ட நீதிபதி மிஸ்ரா, “நானோ, சக நீதிபதியோ இங்கு எந்த பெயர்களைக் குறிப்பிடுவதைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை” என்றார்.

பிறகு வழக்கறிஞரை நோக்கி, “நாட்டை யார் பாதுகாக்க வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர், “நீதிமன்றம்தான் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை நாடி வந்தேன்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி மிஸ்ரா, “இல்லை. அரசியல் சாசன ரீதியில் அனுமதிக்கப்பட்ட மதிப்பீடுகளைக் காக்கவே நீதித்துறை உள்ளது. நீங்கள் அச்சுறுத்தல் என்கிறீர்கள், அதற்குத்தான் மத்திய அரசும் ராணுவமும் உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in