

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை மாதம் 25-ம் தேதி முடிகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவ், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர் களிடம் சரத் யாதவ் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்துத்துவா கொள்கைகளில் தீவிர பற்றுள்ள ஒருவரை, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்தால், எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக எதிர்த்து போட்டியிடும். அதே நேரத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவரை வேட்பாள ராக அறிவித்தால், எதிர்க்கட்சி களிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
‘லவ் ஜிகாத்’, ‘கர் வாப்ஸி’ ஆகிய 2 பிரச்சினைகளுக்கும் சில இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்புள்ளது. அந்த அமைப்புகள் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு வருகின்றன. சட்டத்தில் லவ் ஜிகாத் என்ற வார்த்தை எங்கு எழுதப்பட்டுள்ளது? வயதுக்கு வந்தவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள (ஜாதி, மதம் பாராமல்) நமது சட்டம் அனுமதிக்கிறது.
இந்த சட்டத்தின் மீது இந்துத் துவா அமைப்புகள் தாக்குதல் நடத்துகின்றன. ஜாதி வேறுபாடு களைக் களைய இந்த அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தாய் மதத்துக்கு மாற்றுகிறோம் என்று கர் வாப்ஸியில் ஈடுபடு கின்றனர். இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.