

மகாராஷ்டிர மாநிலம் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டு வறட்சி நிலையை எதிர்கொண்டு வருவதையடுத்து அகமட்நகர் மாவட்ட குகடி கால்வாய் திட்டப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு நிலவரம் சீர்குலையாமல் தடுக்க லாத்தூர், பர்பானி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தற்போது அகமட்நகர் மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது.
நீர்நிலைகள், நீர்த்தேக்கங்கள் அருகில் 5 நபர்களுக்கும் மேல் கூடமுடியாததை இந்த 144 தடை உத்தரவு உறுதி செய்கிறது.
இந்த குகடி கால்வாய்த் திட்டத்தின் மூலம் புனே, அகமட்நகர் இரண்டுமே தண்ணீர் பெற்று வருகின்றன. பாசனத்திற்காக இந்த நீர் பயன்படுத்துவதாக கடும்புகார்கள் தினசரி எழுந்துவரும் நிலையில், குடிநீர் உபயோகம் தவிர வேறு பயன்பாடுகளுக்கு இந்த நீர் பயன்படுத்தப் படக்கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகமட்நகர் மாவட்ட ஆட்சியர் அனில் கவாடே கூறும்போது, “நிலத்தடி நீர் அளவு சீராக குறைந்து வருவதாலும், அணைகளில் நீரின் அளவு 50% மட்டுமே இருப்பதாலும், குடிநீர் பயன்பாடுகளுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடுகிறோம். மே 5 வரை 144 தடை உத்தரவு நீடிக்கும்” என்றார்.
நிலத்தடி நீரின் அளவு கடுமையாகக் குறைந்து வருவது சுகாதாரப் பிரச்சனைகளையும் தற்போது உருவாக்கியுள்ளது. சுமார் 1650 கிராமங்களுக்கு 2000 டேங்கர்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்கர்களில் வரும் தண்ணீர் மாசடைந்த நிலையில் கிராமப்புறங்களில் விநியோகிக்கப்படுவதால் இந்த ஆண்டு ஜனவரி முதல் நீர் தொடர்பான தொற்று நோய்கள் உருவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை கிருமி தாக்கிய நோய்களில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.