

2014 தேர்தலுக்குப் பின் தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
20-வது ஆண்டு விழாவை ஒட்டி, தேசியப் பங்குச்சந்தை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்த நிலையில் சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் பேசியதாவது: " 2014- மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை சொல்ல முடியாது.
ஒரு வேளை, 2014 தேர்தலுக்குப் பின் நிலையான ஆட்சி அமைந்தால் பொருளாதாரப் பின்னடைவுகளில் இருந்து மீள முடியும். இந்திய ஜனநாயகம் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது.
நாடாளுமன்றம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் சட்ட அமைப்புகள் மூலமாகவே தீர்வு கிட்டி விடும் என்ற தவறான பார்வை நிலவுகிறது.
சில அமைப்புகளின் அதிகாரங்கள் செயல் அதிகாரிகளின் கைககளை கட்டி வைத்துள்ளன. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்கள் பிரச்சினைகள் மீது தனிப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. என்றார்."