Last Updated : 20 Mar, 2017 10:32 AM

 

Published : 20 Mar 2017 10:32 AM
Last Updated : 20 Mar 2017 10:32 AM

ஏழைகளை ஏமாற்றி பணம் வசூல்: எல்லோருக்கும் வீடு திட்டத்தில் மோசடி தீவிர விசாரணை நடத்த வேண்டும் - நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்

‘‘எல்லோருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி, போலி கட்டுமான நிறுவனங்களும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் ஏழைகளிடம் பணம் வசூலித்துள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தி உள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பிஜு ஜனதா தள எம்.பி. பினாகி மிஸ்ரா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோனா திட்டத்தின் கீழ் வீடுகள் பெற ரூ.150 கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று போலி பிரச்சாரங்களில் சில சமூக விரோத சக்திகள், அரசு சாரா அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போலி கட்டுமான நிறுவனங்களும் வீடுகள் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி ஏராளமான ஏழைகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பதிவு செய்துள்ளன.

இதுகுறித்து வந்துள்ள புகார்கள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வந்துள்ள எல்லா புகார்களையும் பெற்று அமைச்சகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், சமூக விரோத சக்திகள் ஏழைகளிடம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிவிடும். இதை தடுக்காவிட்டால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் கருதுவார்கள். அதன்பிறகு, மத்திய அரசின் எந்த திட்டத்தையும் அவர்கள் நம்ப மாட்டார்கள்.

வீடுகள் ஒதுக்கீடு திட்டத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகளில் உடனடியாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை முனைப்புடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x