

‘‘அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருவதை உறுதிப் படுத்த, அனைத்து அலுவலகங் களிலும் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவு கருவியைப் பொருத்த வேண்டும்’’ என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பசுக்கள் கடத்தலைத் தடுக்கவும், சட்டவிரோத இறைச்சி கூடங்களை மூடவும் உத்தரவிட்டார். பின்னர் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வெற்றிலை, பான் மசாலாக்கள் பயன்படுத்த கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்.
அதன் அடுத்த கட்டமாக ஊழியர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த அனைத்து அலுவலகங்களிலும் ‘பயோமெட்ரிக்’ கருவி பொருத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு கிராமப்புற மேம்பாட்டுத் துறை உயரதிகாரி களுடன் முதல்வர் ஆதித்யநாத் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் தகவல் பலகை வைக்க வேண்டும். அதில் பஞ்சாயத்துத் தலைவரைத் தொடர்பு கொள்ளும் விவரங்கள் இடம்பெற வேண்டும். அத்துடன் பஞ்சாயத்தில் என்னென்ன திட்டங் கள் நடைபெறுகின்றன என்ற தகவல்களையும் அதில் குறிப்பிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 5.73 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்படும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வெளிப்படை யான செயல்பாடுகளை உறுதி செய்ய பயனாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்’’ என்றார்.