

சட்ட ஆணையம் பரிந்துரைப்படி தேர்தல் சீர்திருத்தம் குறித்து பரிசீலித்து வருவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. இது அரசியல் சாசனத்துக்கு முரணாக உள்ளது. எனவே, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
“எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்க வாய்ப்புள்ள குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட உடனே அவர்களது பதவியைப் பறிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அதிகபட்ச வயதுவரம்பை நிர்ணயிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா செகால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தேர்தல் சீர்திருத்தம், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளைச் சட்ட ஆணையம் வழங்கி உள்ளது.
சட்ட ஆணையத்தால் 244 மற்றும் 255-வது அறிக்கைகள் மூலம் வழங்கப்பட்ட இந்த பரிந்துரைகளை அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, இவற்றை ஆய்வு செய்து அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க மத்திய சட்ட அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அல்லது அரசே வழங்குவது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களையும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.