

தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பெண் பத்திரிக்கையாளார் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள விவகாரத்தில், முன் ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
இதற்கிடையில், பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் பத்திரிகையாளர் தன் பணியை நேற்று ராஜினாமா செய்தார். அவரிடம் இன்று கோவா போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். அவரிடம் விசாரணை முடித்த பின்னர் தேஜ்பாலிடம் விசாரணை நடத்த கோவா போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நவம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை கோவாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலில், தெஹல்கா நடத்திய அலோசனைக் கூட்டத்தின் போது நடந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, டெல்லியில் தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி உள்ளிட்ட 3 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததோடு சில ஈமெயில் ஆதாரங்களையும் கோவா போலீசார் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.