

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மிசோரம் சட்டமன்றத் தேர்தலையொட்டி லங்லி நகரில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் சோனியா காந்தி பேசியதாவது:
“சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைபவர்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பக்கத்து நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மிசோரமில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
கலாடன், துய்ரியல், துய்வய் நீர்மின் திட்டம், கலாடன் போக்குவரத்துத் திட்டம் ஆகியவை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
மாவட்டந்தோறும் விளையாட்டு கட்டமைப்புகளையும், பெண்கள் விடுதியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு மலிவு விலையில் சத்தான உணவு கிடைக்க உணவுப் பாதுகாப்புத் திட்டம் வகை செய்துள்ளது.
மிசோரமில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இங்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த பேரணியில் முதல்வர் லால் தன்ஹாவ்லா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, லுய்சின்ஹோ பெலேய்ரோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.