

பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் மசோதாவுக்கு மக்களவையும் ஒப்புதல் அளித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகால சலுகைகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.’
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை), முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் மசோதாவுக்கு மக்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 18 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
இதுகுறித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ''சர்வதேச மகளிர் தினத்துக்கு அடுத்த நாளில், பெண்களுக்கு அளிக்கப்படும் பணிவான பரிசு இது'' என்றார்.
புதிய சட்டம் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த 26 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே 50 மற்றும் 44 வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிப்பதை அடுத்து, இந்தியாவும் பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான சட்டத்தை இயற்றியுள்ளது.
'இன்று வரலாறு படைத்துள்ளோம்'
புதிய சட்டம் குறித்துப் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, ''இன்று நாம் வரலாறு படைத்துள்ளோம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இச்சட்டம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதன்மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும்.
அதே நேரத்தில் நிறுவனங்கள் பெண்களுக்கு 26 வாரங்கள் விடுமுறை அளிப்பதை உறுதி செய்திட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.